கடல்தொழிலாளர்களின் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு
ஏனைய சகல தரப்பினரையும் வெகுவாகப் பாதித்துள்ளது.
- விந்தன் கனகரத்தினம்
கடல்தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்பினை தனியே கடல்தொழிலாளர்களின் பிரச்சினை என்று மட்டுப்படுத்தி விட முடியாது. அது, சகல மக்களையும் பாதிக்கின்ற பிரச்சினை ஆகும். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
தொழில் உபகரணம் இன்மை காரணமாக தொழிலின்றி உதவிகளுக்காகக் காத்திருக்கும் 50 கடல்தொழிலாளர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் ரூபா 10 ஆயிரம் பெறுமதியான கடல்தொழில் உபகரணங்களை வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வழங்கினார்.
தனது உறுப்பினர் நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு இவ் உபகரணங்கள் மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, ஊர்காவற்றுறை, தமபாட்டி, மெலிஞ்சிமுனை, எழுவைதீவு, அனலைதீவு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த புதன் கிழமையன்று (25.01.2017) வழங்கப்பட்டன.
தனது உறுப்பினர் நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு இவ் உபகரணங்கள் மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, ஊர்காவற்றுறை, தமபாட்டி, மெலிஞ்சிமுனை, எழுவைதீவு, அனலைதீவு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த புதன் கிழமையன்று (25.01.2017) வழங்கப்பட்டன.
வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சில் நடைபெற்ற இந் நிகழ்வில் பயனாளிகள் மத்தியில் விந்தன் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடல்தொழிலாளர்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட தரப்பினராகவுள்ளனர். எங்களுடைய வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தில் கடல்தொழிலாளர்களுக்கு அதிக பங்குள்ளது. எனினும் துரதிஸ்டவசமாக யுத்தத்தினால் கடல்தொழிலாளர்கள் தங்களைக் காப்பாற்ற முடியாதவர்களாக அதிகளவில் உள்ளனர். இதனால் வடக்கு மாகாண பொருளாதாரத்திற்கு மேலும் அதிகளவில் தம் பங்களிப்பை வழங்குவதில் இருந்து கடல்தொழிலாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். எங்களுடைய தொழிலாளர்களிடம் மனித தொழில் வல்லமை இருந்தும் தொழிலுக்கான அடிப்படை உபகரணங்கள் இன்மை தொடர்ந்து தொழிலை முன்னெடுப்பதில் தடையாகவுள்ளது.
யுத்தம் ஆரம்பித்த காலம் முதல்; கடல்தொழில், பலதரப்பட்ட இராணுவக் கெடுபிடிகளால் எம் மண்ணில் அழிக்கப்பட்டது. கடலில் தொழிலுக்குச் சென்றால் அங்கிருந்து உயிருடன் திரும்பி வரமுடியுமா என்ற ஏக்கத்துடனேயே கடல் தொழிலில் ஈடுபட்டனர். பல கடல்தொழில் துறைமுகங்கள் மற்றும் கரையோரங்களும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தன. இன்றும் இலங்கையில் இருக்கக் கூடிய இயற்கைத்துறை முகங்களில் ஒன்றான மயிலிட்டித்துறைமுகம் உயர்பாதுகாப்பு வலயமாகவே உள்ளது. இவ்வாறான அச்சுறுத்தல்களின் காரணமாக எனக்குத் தெரிந்த வரையில் பல கடல்தொழிலாளர்கள் தொழிலை விட்டு வேறு தொழில்களுக்கு பெயர்ந்துவிட்டனர். இவ்வாறாக வேறு தொழில்களுக்குச் சென்ற பலர் கூலி வேலைகளுக்கு அதிகளவில் சென்றுள்ளனர். இதனால் எமக்கிருக்கக் கூடிய கடல் வளத்தினைப் பயன்படுத்திய உற்பத்திகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கடல்தொழிலில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தனியே கடல்தொழிலாளர்களுக்கான பாதிப்பு மட்டும் அல்ல. ஏனைய சகல தரப்பினரையும் அது பாதிக்கின்றது. கடலுணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இது போசாக்குள்ள உணவை எமது இளந்தலைமுறையினருக்கு இல்லாதாக்கின்றது. போருக்குப் பின்னர் கடல்தொழிலாளர்கள் தொழில் ரீதியில் இழந்தவற்றுக்கான குறைந்த பட்ட இழப்பீடு கூட அவர்களுக்கு இன்றும் கிட்டவில்லை. இப் பிரச்சினை இவ்வாறு இருக்க, இராணுவ நடவடிக்கைகளால் அழிக்கப்பட்ட கடல்தொழிலுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் புனரமைக்கப்படவில்லை. சில இடங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன தான். எனினும் அவை ஏதும் இழப்புக்களில் இருந்து மக்கள் மீள்வதற்கானவையாகக் காணப்படவில்லை.
இன்றும் வடக்கில் ஆழ்கடல் மீன்பிடிக்கான வசதிகள் கடல்தொழிலாளர்களை தேவைக்கேற்ப வந்தடையவில்லை. இவை எல்லாம் எமது கடல்தொழிலாளர்கள் சோம்போரிகளாக இருந்ததனால் கிட்டாமல் போகவில்லை. மாறாக எம் மீது தொடுக்கப்பட்ட கொடிய போரின் விளைவுகளாக நாங்கள் நிர்மூலஞ்செய்யப்பட்டமையின் காரணமாகும்;. எனவே பாதிக்கப்பட்ட தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்குக் கூட உள்நாட்டில் போராடித்தான் அதிக தூரம் பயணித்தாக வேண்டியுள்ளது.
கருத்துகள் இல்லை: