போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை
மீள்விப்பது இனம் சார்ந்த முன்னேற்றத்திற்கு கட்டாயமானது
- விந்தன் கனகரத்தினம்
போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தினைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை நம்ப முடியவில்லை. நாம் மாகாண மட்டத்தில் துரிதகதியில் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட வறுமையில் நிலையில் உள்ள யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட இருபது குடும்பங்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (24.01.2017) 20 தையல் இயந்திரங்களை, ஐந்து இலட்ச ரூபாவை தனது உறுப்பினர் நிதியில் ஒதுக்கீடுசெய்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் வழங்கினார். நயினாதீவு,நாரந்தனை, புளியங்கூடல், தம்பாட்டி, மாதகல், நெடுந்தீவு, கொழும்புத்துறை,யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கே இத் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. கிராம அபிவிருத்தித் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உதவிகளை வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே விந்தன்; இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதை எமது தலையாய கடமையாக நாம் மேற்கொள்ளவேண்டியுள்ளது. போரின் காரணமாக எமது மக்கள், உடமைகள் மற்றும் தொழில் செய்யவதற்கான அடிப்படைக் கட்டுமானங்கள் சகலவற்றினையும் இழந்துள்ளனர். அவ்வாறு இழந்து நிற்கும் மக்களை மீண்டும் வாழ்வாதார ரீதியில் கூட மீள்விப்பதற்கு நாட்டின் ஆட்சியாளர்கள் தயாரில்லை. போரில் மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்தது இலங்கை அரசாங்கமேயாகும். இலங்கையில் இனமுரண்பாடுகளைத் தீர்க்காது மீண்டும் மீண்டும் இன ஒடுக்குமுறையை இராணுவ பலம் கொண்டு எம்மில் பிரயோகித்தமை காரணமாகவே நாம் ஆயுதமேந்தவேண்டிவந்தது. அந்த ஆயுதப் போராட்டத்தினை போரியல் நீதிக்குப் மாறாக அரசாங்கம் ஒடுக்கியது. அவ்வாறு ஒடுக்கியதுடன் மட்டும் கதை முடியவில்லை. எம்மை நடைபிணங்களாக வாழ வைக்கவேண்டும் என்ற திட்டமிட்ட பின்புலத்துடன் எமக்கென்று இருந்த சகலதையும் அரசாங்கம் அழித்துவிட்டது.இவ்வாறு அழிக்கப்பட்டதன் விளைவு எம்மால் இன்று சராசரி வாழ்வாதாரத்தினைக்கூட காப்பாற்ற முடியாத பேரவலத்திற்குள் தள்ளப்பட்டு நிற்கின்றோம். இந்த நிலையில், எமது வடக்கு மாகாண சபையும் அதன் உறுப்பினர்களான நாமும் எம்மால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆற்றுகின்றோம். இதன் ஓர் தொடர்ச்சியே இன்று தெரிவு செய்யப்பட்ட உங்களுக்கு வாழ்வாதார இந்த உதவியினை நல்க முடிகின்றது.
இந்த உதவிகளைப் பெறும் எமது மக்கள் கிடைக்கின்ற உதவிகளை உச்சமாகப் பயன்படுத்தவேண்டும். அவ்வாறு அவர்கள் பயன்படுத்துவதன் ஊடாக தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவேண்டும். உங்களது வாழ்வாதாரம் மேம்படும் பட்சத்தில் நீங்கள் கிடைக்கின்ற வருமானங்களை உங்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு பயன்படுத்தமுடியும். அத்துடன் எமது இனம் என்ற வகையில் நீங்கள் முன்னேற்றமான ஓர்வாழ்க்கையினை வாழும்போதுதான் இன ரீதியிலான முன்னேற்றங்களையும் நாம் அடைந்து கொள்ள முடியும்.
உங்களது வாழ்வாதாரத்தினை கீழ்மட்டத்தில் போருக்குப் பின்னர் கொண்டு செல்லவேண்டும் என்பதில் அரசாங்கத்திடம் தனி நிகழ்ச்சி நிரல் காணப்படுகின்றது. அதனாலேயே அது தமிழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் உரிய திட்டங்களை போருக்குப் பின்னர் வகுக்கவில்லை. இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பின் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். 
கருத்துகள் இல்லை: